இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்


இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
x
தினத்தந்தி 2 Feb 2019 8:00 PM GMT (Updated: 2 Feb 2019 7:55 PM GMT)

இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் நவீன துப்பாக்கிகள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

ராணுவத்தை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இருந்து 73 ஆயிரம் ‘சிக் சவர்’ துப்பாக்கிகள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ராணுவம் பரிந்துரைத்தது.

நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சகம் தற்போது ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த துப்பாக்கிகள் வாங்குவதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்து விட்டார். இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கிகள் வாங்குவதற்காக ஒரு வாரத்துக்குள் அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படும்.

அதில் இருந்து ஒரு ஆண்டுக்குள் இந்த நவீன துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனம், இந்தியாவுக்கு வழங்கும். இந்த துப்பாக்கிகள், சீனாவுடனான 3600 கி.மீ. தூர எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும். இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த துப்பாக்கிகளை வீரர்கள் பயன்படுத்துவார்கள் என ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாட்டு படைகளிடம் இந்த துப்பாக்கிகள் தற்போது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story