பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு


பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு
x
தினத்தந்தி 16 Feb 2019 8:35 AM GMT (Updated: 2019-02-16T14:05:51+05:30)

பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம், காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச்செய்து கொடிய தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கி உள்ள இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. 

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்,  புல்வமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு உறுதுணையாக இருப்போம் எனவும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத்,  மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம். 1947-ம் ஆண்டு போரை தவிர்த்து, இவ்வளவு அதிக எண்ணிக்கையில், வீரர்கள் கொல்லப்பட்டது இதுதான் முதல் தடவையாகும். ராணுவம், சி.ஆர்.பி.எப், உள்ளூர் போலீசார் ஆகிய பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒட்டுமொத்த நாடும் உள்ளது. புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்  என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்” என்றார்.

Next Story