காஷ்மீர் தாக்குதலுக்கு 40 பேர் பலி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் - ‘பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட உறுதி’


காஷ்மீர் தாக்குதலுக்கு 40 பேர் பலி: டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் - ‘பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட உறுதி’
x
தினத்தந்தி 16 Feb 2019 11:15 PM GMT (Updated: 16 Feb 2019 8:56 PM GMT)

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட உறுதி எடுத்துள்ளோம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள். இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, ஆனந்த் சர்மா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஷ்சந்திர மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சிவசேனா சார்பில் சஞ்சய் ரவுத், ராஷ்டிரீய ஜனதாதளம் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஜிதேந்திர ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் சுதீப் பந்தோபாத்யாய், டெரிக் ஓபிரெய்ன், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்றனர்.

கூட்டத்தில், அரசு சார்பில் காஷ்மீரில் இப்போது உள்ள நிலைமை மற்றும் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு விளக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் வீரர்களுக்கு நாடே ஒற்றுமையுடனும், உறுதியுடனும் ஆதரவு அளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா கடந்த 30 ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் பயங்கரவாதத்தை எல்லை தாண்டிய சக்திகள் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்தியா இந்த அச்சுறுத்தல்களில் இருந்து மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த 14-ந் தேதி காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் 40 மத்திய ஆயுதப்படை போலீஸ் வீரர்கள் பலியாவதற்கு காரணமான இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.

நாங்கள், நமது நாட்டு மக்களுடன் இணைந்து பலியானவர்களின் குடும்பங்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். அனைத்து வகை பயங்கரவாதத்தையும், அதற்கு எல்லைக்கு அப்பால் இருந்து ஆதரவு அளிக்கும் சக்திகளையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் நமது பாதுகாப்பு படைகளுக்கு நாங்கள் ஒருங்கிணைந்து உறுதியான ஆதரவை வழங்குகிறோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசும்போது, “இந்தியா பாகிஸ்தானுடன் ஒரு தீர்க்கமான போர் நடத்திவருகிறது. நாங்கள் இந்த போர் குறித்து விவாதித்து முடிவு எடுப்போம். வீரர்களின் உயிர்த்தியாகம் வீணாக போகக்கூடாது. பயங்கரவாதத்துக்கு ஒரு முடிவுகட்ட நாங்கள் உறுதி எடுத்துள்ளோம்” என்றார்.

கூட்டத்துக்கு பின்னர் குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “அனைத்து தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் அழைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று நாங்கள் உள்துறை மந்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மற்ற கட்சிகளும் இதனை ஆதரித்துள்ளன. ஒட்டுமொத்த நாடே இன்று துயரத்திலும், கோபத்திலும் இருக்கிறது” என்றார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை முன்னிட்டு ராஜ்நாத் சிங் முன்னதாக நேற்று காலை தனது வீட்டில் உளவுத்துறை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் கடந்த 36 மணி நேரத்தில் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய விவரங்களை எடுத்து கூறினார்கள். அரசு இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க உறுதியுடன் இருப்பதாக தெரிகிறது.


Next Story