பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்தாலும் தேடிப்பிடித்து தண்டிப்போம் - பிரதமர் மோடி எச்சரிக்கை


பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்தாலும் தேடிப்பிடித்து தண்டிப்போம் - பிரதமர் மோடி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Feb 2019 11:30 PM GMT (Updated: 2019-02-17T02:32:44+05:30)

பயங்கரவாதிகளை தண்டிக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஓடி ஒளிந்து கொண்டாலும் தேடிப்பிடித்து தண்டிப்போம் என்று பிரதமர் மோடி கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் யாவாத்மால் மாவட்டம் பந்தார்கவடாவில் நேற்று நடந்த பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பழங்குடியின மாணவர்களுக்கான உறைவிட பள்ளியை தொடங்கி வைத்தார். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கினார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான துணை ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், விழாவில் பேசியபோது, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மோடி பேசியதாவது:-

திவால் நிலையில் உள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மற்றொரு பெயராக மாறியுள்ளது.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினரின் வேதனையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். மக்களின் கோபத்தை புரிந்து கொண்டுள்ளோம். அந்த வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது.

தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் ஓடி ஒளிந்து கொண்டாலும் கூட அவர்கள் வெளியே இழுத்து வரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு மோடி பேசினார்.

மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, ஹன்ஸ்ராஜ் அகிர், மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story