காஷ்மீர் தாக்குதல்: பாதுகாப்பில் மிகப்பெரும் குளறுபடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு


காஷ்மீர் தாக்குதல்: பாதுகாப்பில் மிகப்பெரும் குளறுபடி- காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Feb 2019 6:43 AM GMT (Updated: 19 Feb 2019 6:43 AM GMT)

புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசை விமர்சிக்காமல் இருந்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இன்று முதல் முறையாக விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் இயங்கி வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசுக்கு எதிராக  கடந்த சில தினங்களாக எந்த கருத்தையும் காங்கிரஸ் முன்வைக்கவில்லை. கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நமது நேசத்திற்குரிய வீரர்கள் உயிரை பறிகொடுத்து இருக்கிறோம். வீரர்களின் குடும்பத்தினரோடு நாம் துணை நிற்க வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எந்த கருத்துக்களையும் வெளியிடாது” என்றார். இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் முதல் முறையாக அரசை விமர்சித்துள்ளது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தனது டுவிட்டரில், மத்திய அரசை விமர்சித்து இருப்பதாவது:- “ புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டது. 2014- தேர்தலுக்கு முன்பு மோடி கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். சிறிய நிகழ்வுகளுக்கு கூட அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல், ஆகியவற்றுக்கு பிறகும் கூட நாங்கள் அத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. ஆனால், மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.78 வாகனங்களில் 2,500 வீரர்களை ஒரே நேரத்தில் அனுப்பியது, அதேநேரத்தில் பொதுமக்கள் வாகனத்தை ஒரே நேரத்தில் பயணிக்க அனுமதித்தது, உளவுத்துறையின் நேரடி அறிக்கைகளை புறம் தள்ளியது போன்ற மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்துள்ளன” என்று தெரிவித்தார். 

Next Story