சவுதி அரேபியா இளவரசர் டெல்லி வருகை -பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு


சவுதி அரேபியா இளவரசர் டெல்லி வருகை -பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 19 Feb 2019 5:10 PM GMT (Updated: 19 Feb 2019 5:10 PM GMT)

டெல்லி விமான நிலையத்தில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை, பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 மணியளவில் டெல்லி வந்து சேர்ந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங்கும் உடனிருந்தார்.
 
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  சவுதி பட்டத்து இளவரசரிடம் பாகிஸ்தான் ஊக்குவிக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றி இந்தியா எடுத்துரைக்கும் என்று தெரிகிறது.     

Next Story