ஆந்திரா, அருணாசல், ஒடிசா, சிக்கிம் 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் - நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படுகிறது
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4 மாநில சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிகிறது. அந்த மாநிலங்களும், அவற்றின் ஆயுள்காலம் முடியும் நாளும் வருமாறு:-
சிக்கிம் - மே மாதம் 27-ந் தேதி
அருணாசலபிரதேசம் - ஜூன் 1-ந் தேதி
ஒடிசா - ஜூன் 11-ந் தேதி
ஆந்திரா - ஜூன் 18-ந் தேதி
இந்த 4 மாநில சட்டசபைகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சிக்கிம் மாநில சட்டசபையில் 32 இடங்கள் உள்ளன. இங்கு முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) ஆட்சி நடக்கிறது. இங்கு ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அருணாசல பிரதேச சட்டசபையில் 60 இடங்கள் உள்ளன. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திலும் ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
ஒடிசா மாநில சட்டசபையில் 147 இடங்கள் உள்ளன. இங்கு முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதள கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் ஏப்ரல் 10, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
ஆந்திர சட்டசபையில் மொத்த இடங்கள் 176 ஆகும். இந்த மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் இல்லை
நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிகிற நிலையில் அவற்றுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காலியாக உள்ள காஷ்மீர் மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அங்கு 4 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கு பல கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்தநாக் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டுமே 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவதை ஒத்திபோட வேண்டும் என்று மாநில அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டதால்தான் அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை.
Related Tags :
Next Story