பிரதமர் தொலைக்காட்சி மட்டும் வைத்துள்ளார், தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி தொலைக்காட்சி மட்டும் வைத்திருக்கிறார் என்றும் தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
புவனேஸ்வர்,
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை கடந்த 2ந்தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களாக, கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறத்தேவையில்லை. 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருத்தப்பட மாட்டாது. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.
உள்ளுர் நக்சல்கள் மீது வழக்கு தொடுக்க மாட்டோம் என்றும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அறிக்கை ஆபத்து நிறைந்த விசயங்களை கொண்டுள்ளது என்றும் நிறைவேற்ற சாத்தியப்படாத விசயங்களை கொண்டுள்ளது என்றும் பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகியான பிரியங்கா சதுர்வேதி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, காங்கிரசின் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை. கடந்த 5 வருடங்களில் தீவிரவாத தொடர்புடைய சம்பவங்கள் நாட்டில் 260 சதவீதம் உயர்வடைந்து உள்ளது.
செயல்திறனற்ற பிரதமர் மோடியின் அரசாட்சியானது அவரிடம் தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லை. தொலைக்காட்சி மட்டும் உள்ளது என வெளிப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் வழங்கிய உறுதிமொழிகள் எதனையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. காவி கட்சியானது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு மற்றும் வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என உறுதி அளித்தது. ஆனால் இவற்றில் எவையேனும் சிலவற்றை கூட நிறைவேற்ற தவறி விட்டது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story