துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை: வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவு


துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை: வருமான வரித்துறை அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவு
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 10:14 PM GMT)

துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை தொடர்பான வருமான வரித்துறையின் அறிக்கை அடிப்படையில் தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.

புதுடெல்லி,

துரைமுருகன் மற்றும் தி.மு.க.வினர் வீடுகளில் நடந்த சோதனை தொடர்பான வருமான வரித்துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தேர்தல் கமிஷன் வேலூர் தேர்தலை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பத்திரிகை தகவல் மையம் வெளியிடுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் கமிஷன் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. தேர்தல் கமிஷனின் இந்த முடிவு தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்கு தனது செல்வாக்கை பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதே காரணம்.

சென்னை வருமான வரித்துறை இயக்குனர் (புலனாய்வு பிரிவு) பி.முரளிகுமார் தேர்தல் கமிஷனுக்கு கடந்த 5-ந் தேதி ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.

அதில், மார்ச் 29 மற்றும் 30-ந் தேதி வருமான வரித்துறையினர் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., அவரது மகனும், வேலூர் தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த், கிங்ஸ்டன் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் நடத்திய சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி தெரிவித்துள்ளார்.

சோதனை நடத்திய குழுவினர் அந்த கல்லூரிக்குள் நுழைவதை தடுத்து, அந்த சமயத்தில் அங்கு இருந்து கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு கருவி, கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், அதிக அளவில் பணம் மற்றும் இதர பொருட்களை வெளியே கொண்டு சென்றுள்ளதை அறிந்தனர்.

கிடைத்த ரகசிய தகவலின்படி கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்களின் நெருங்கிய கூட்டாளிகளின் இடங்களில் சோதனை நடத்தியதில் தி.மு.க. தொண்டர் சீனிவாசனின் உறவினர் தாமோதரன் வீட்டில் பிளாஸ்டிக் மூட்டைகளில் வார்டு விவரங்களுடன் ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டது. அதோடு பயன்படுத்தப்படாத லேபிள்கள், வார்டு வாரியாக வாக்காளர் விவரங்கள் அடங்கிய சீட்டுகள், கிங்ஸ்டன் கல்லூரி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அந்த பணம் தங்களுடையது என்றும், அது தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்றும் தெரிவித்தனர். அந்த பணத்துக் கான ஆதாரம் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை. இது தொடர்பான அவர்களது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல செலவின மேலிட பார்வையாளர் மது மகாஜன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆகியோரும் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதன்படி இதுதொடர்பான உண்மை நிலவரம், தற்போதைய சூழ்நிலை குறித்து தேர்தல் கமிஷன் முழுமையாக ஆய்வு செய்து வேலூர் தொகுதியில் 18-ந் தேதி நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதை இது பாதிக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஜனாதிபதியும் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story