பானி புயல் பாதித்த ஒடிசாவுக்கு மாநில அரசுகள் நிதியுதவி அறிவிப்பு


பானி புயல் பாதித்த ஒடிசாவுக்கு மாநில அரசுகள் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 May 2019 7:18 PM IST (Updated: 5 May 2019 7:18 PM IST)
t-max-icont-min-icon

பானி புயல் பாதித்த ஒடிசா மாநிலத்துக்கு மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளது. #Fanistorm

புவனேசுவரம்,

தமிழகத்தை குறிவைத்த ‘பானி’ புயல் பாதை மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஒடிசாவை பந்தாடியது. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியும், இடைவிடாது பெய்த மழையும் கடலோர மாவட்டங்களை நிலை குலையச்செய்து விட்டன. ஆன்மிக நகரமான பூரியில் தொடங்கி 52 நகரங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும் பானி புயலால் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.

பானி புயலால் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் மட்டுமின்றி மருத்துவமனை, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கல் உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. பானி புயலை சரியாக கையாண்டு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்தற்காக இந்தியாவை ஐ.நாவை சேர்ந்த பேரிடர் மீட்புக் குழு பாராட்டியுள்ளது. மேலும் இந்த பானி புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 12 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயலால் பாதித்த ஒடிசாவுக்கு, மாநில அரசுகள் நிவாரண நிதி அறிவித்துள்ளது. அதன்படி சத்தீஸ்கர் அரசு சார்பில் ரூ.11 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார். அதேபோல் உத்திரபிரதேச அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story