அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா?


அமேதியில் ராகுலுக்கு கடுமையான சவால்; வயநாட்டிலிருந்து எம்.பி. ஆவாரா?
x
தினத்தந்தி 20 May 2019 4:06 PM GMT (Updated: 20 May 2019 4:06 PM GMT)

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கடுமையான சவால் இருப்பதாக கருத்துக்கணிப்பு தகவல் தெரிவிக்கிறது.


ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்தத் தொகுதியான அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மாநிலத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜவாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. எனினும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

அமேதியில் கடும் சவால்

தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என தெரிவித்துள்ளன.  உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியுள்ளன. அதே சமயத்தில், பா.ஜனதாவும் 30 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 1-2 தொகுதிகளில் வெற்றிப்பெறலாம் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்பது தெளிவாகிறது. ஆனால் அமேதி தொகுதியில் ராகுலுக்கு கடுமையான சவால் இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. 

 கடந்த 2014-ஆம் ஆண்டு ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஸ்மிருதி இரானி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறார். அங்கு காங்கிரஸ் வெற்றிக்கு பிரகாசமான காரணி தென்படவில்லை என்றே காட்டுகிறது என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது. அமேதி காங்கிரசுக்கு மிகவும் கடுமையான தொகுதியாக மாறியுள்ளது. அமேதியுடன் ஒப்பிடுகையில் வயநாடு தொகுதி ராகுல் காந்திக்கு பாதுகாப்பான தொகுதியாக இருக்கும். அங்கிருந்து அவர் எம்.பி.யாக வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story