வீட்டுக்குள் புகுந்த யானை தூங்கிக்கொண்டிருந்தவர்களை தாக்கியது - இளம்பெண் சாவு; தாய், தங்கை காயம்


வீட்டுக்குள் புகுந்த யானை தூங்கிக்கொண்டிருந்தவர்களை தாக்கியது - இளம்பெண் சாவு; தாய், தங்கை காயம்
x
தினத்தந்தி 2 Jun 2019 2:11 AM IST (Updated: 2 Jun 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்குள் புகுந்த யானை தூங்கிக்கொண்டிருந்தவர்களை தாக்கிய சம்பவத்தில் இளம்பெண் ஒருவர் பலியானார். மேலும் அவரது தாய், தங்கை ஆகியோர் காயமடைந்தனர்.

ஜாஷ்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் பதால்கோல் வனஉயிரின சரணாலயம் அருகில் உள்ள ராம்ஷாமா கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் சவுகான். நேற்று முன்தினம் இரவு அவரது மனைவி முன்னிபாய், மகள்கள் லலிதா (17), வர்ஷா (7) ஆகியோர் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு யானை அவர்களது வீட்டின் மண் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரையும் காலாலும், தும்பிக்கையாலும் தாக்கியது.

இதில் லலிதா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முன்னிபாயும், வர்ஷாவும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள். சத்தீஷ்காரில் கடந்த ஒரு மாதத்தில் யானைகள் தாக்கி 4 பேர் இறந்துள்ளனர்.


Next Story