தேசிய செய்திகள்

மத்திய அரசிடம் புதிய கல்வி கொள்கை அறிக்கை தாக்கல்: 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு + "||" + New Education Policy Statement file to the Central Government: Class 6 to Hindi is a lesson - Strong resistance in Tamil Nadu

மத்திய அரசிடம் புதிய கல்வி கொள்கை அறிக்கை தாக்கல்: 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

மத்திய அரசிடம் புதிய கல்வி கொள்கை அறிக்கை தாக்கல்: 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள புதிய கல்வி கொள்கை அறிக்கையில், பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் இந்தியை கற்பிக்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
புதுடெல்லி,

உலகில் உள்ள மிகப்பெரிய துறைகளில் இந்திய கல்வித்துறையும் ஒன்றாகும்.

இந்தியாவில் 10 லட்சத்து 40 ஆயிரம் பள்ளிகளும், 50 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் 30 கோடி மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.


நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கை 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் 1992-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய கல்வி கொள்கையை கொண்டு வரப்போவதாக வாக்குறுதி அளித்தது.

அதன்படி முந்தைய ஆட்சியில் ஸ்மிரிதி இரானி மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்த போது 2016-ம் ஆண்டு, புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக முன்னாள் மந்திரிசபை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு 2017-ம் ஆண்டு மே மாதம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.

என்றாலும் இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்க விரும்பியதால், புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்காக இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட புதிய குழு ஒன்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது. அப்போது, ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள அம்சங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கஸ்தூரிரங்கன் குழுவிடம் மத்திய அரசு கூறியது.

அதன்படி, கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர்கள் குழு கல்வி தொடர்பான பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து, விரிவாக ஆலோசனை நடத்தி தேசிய கல்வி கொள்கை தொடர்பான தனது வரைவு அறிக்கையை தயாரித்து உள்ளது. இந்த வரைவு அறிக்கை புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலிடம் வழங்கப்பட்டது.

அந்த அறிக்கை மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

483 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் மும்மொழி கொள்கை, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகள் இடம்பெற்று உள்ளன.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் வருமாறு:-

* இந்தியாவில் மும்மொழி கொள்கை தொடர்ந்து நீடிக்கவேண்டும். அதை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.

* இந்தி பேசாத மாநிலங்களில் அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்த நடைமுறை 6-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்.

* இந்தி பேசும் மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநில மொழியையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து இந்திய மொழிகளின் அந்தஸ்தும் உயரும். மொழிப்பாட ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

* பல்வேறு மொழிகளை பேசும் இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்பதன் மூலம் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

* உயர்நிலைப்பள்ளியில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் சிறப்பு பாடமாக வெளிநாட்டு மொழிகளை தேர்ந்தெடுத்து படிக்க அனுமதிக்கவேண்டும்.

* ஆரம்ப கல்வியை தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்ளும். புரியாத புதிய மொழியில் கற்பிப்பதன் மூலம் ஆரம்ப வகுப்புகளிலேயே பின்தங்க நேரிடும்.

* தொலைநோக்கு பார்வையில் இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தேசிய கல்வி ஆணையம் என்ற உயர் அதிகார அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

* கணிதம், வானியல், தத்துவம், உளவியல், கட்டிடக்கலை, மருத்துவம், யோகா ஆகியவற்றின் மேம்பாட்டில் இந்தியாவின் பங்களிப்பு, ஆட்சி முறை, சமூக அமைப்பு முறை ஆகியவை பாட திட்டத்தில் இடம்பெற வேண்டும்.

* கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வித்துறை அமைச்சகம் என்று மாற்ற வேண்டும்.

* தனியார் பள்ளிகள் தங்கள் கல்வி கட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கலாம். ஆனால் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது. பணவீக்கம் போன்ற காரணங்களின் அடிப்படையில் நியாயமான அளவுக்கு கட்டத்தை உயர்த்தலாமே தவிர பள்ளி மேம்பாட்டு நிதி போன்றவற்றுக்காக உயர்த்தக்கூடாது.

* மாநில பள்ளி ஒழுங்குமுறை ஆணையம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண உயர்வை ஒழுங்குபடுத்த வேண்டும்.

* ஆண்டு இறுதித் தேர்வில் சில பாடங்களை மீண்டும் நன்றாக எழுத முடியும் என்று மாணவர்கள் கருதினால், மறுபடியும் அந்த பாடங்களை எழுத அவர்களை அனுமதிக்கும் வகையில் புதிய கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வரைவு அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

புதிய கல்வி கொள்கை தொடர்பான இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30-ந் தேதிக்குள் தங்கள் கருத்துகளை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சியை தீவிரமாக எதிர்ப்போம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூறி உள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் இரு மொழி (தமிழ், ஆங்கிலம்) கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி அளித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2020 ஏப்ரலுக்குள் ரூ.639 கோடி செலவில் ராணுவத்திற்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் வாங்கப்படும் மத்திய அரசு
2020 ஏப்ரலுக்குள் ரூ.639 கோடி செலவில் ராணுவத்திற்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகள் வாங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. மத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட்: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கருத்து
மத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
3. மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் ஜூலையில் வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
4. மத்திய அரசில் புதிய துறை ‘ஜல சக்தி’ மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்
மத்திய அரசின் புதிய துறையான ஜல சக்தியின் மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்.
5. மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.