மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அட்சதை தூவி வாழ்த்திய பொதுமக்கள்


மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: அட்சதை தூவி வாழ்த்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Jun 2019 9:01 PM GMT (Updated: 8 Jun 2019 9:01 PM GMT)

மழை வேண்டி தவளைகளுக்கு நடந்த திருமணத்தில், அட்சதை தூவி பொதுமக்கள் வாழ்த்தினர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. உடுப்பி மாவட்டத்திலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி தவளைகளுக்கு ஜூன் 8-ந் தேதி (அதாவது நேற்று) திருமணம் நடத்தி வைக்க உடுப்பியில் செயல்பட்டு வரும் நாகரீக சமிதியினர் முடிவு செய்தனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை உடுப்பி டவுன் பழைய டயானா ரோட்டில் தவளைகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தவளைகள் தனித்தனி கூண்டுகளில் அடைக்கப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ரிக்‌ஷாவில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அப்போது பெண்கள் சீர்வரிசைகளுடன் வலம் வந்தனர்.

பின்னர் புரோகிதர் மந்திரம் ஓத தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் தவளைகள் மீது அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story