அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம்: மாநில அரசுகள் விடுபட்ட பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் - மத்திய அரசு உத்தரவு


அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம்: மாநில அரசுகள் விடுபட்ட பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2019 2:44 AM IST (Updated: 9 Jun 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் விடுபட்ட பயனாளிகளை தேர்வு செய்து தெரிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் ‘பிரதம மந்திரி-கிசான்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள 12.5 கோடி விவசாயிகளுக்கு 3 தவணைகளில் இந்த தொகையை வழங்குவதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

அந்த திட்டத்தின்படி இதுவரை 3.66 கோடி விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 3.03 கோடி பேருக்கு முதல் தவணையும், 2 கோடி பேருக்கு 2-வது தவணையும் வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்திய அரசு அமைக்கப்பட்டதும் மே 31-ந் தேதி நடைபெற்ற முதல் மந்திரிசபை கூட்டத்தில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

புதிய முடிவின்படி 14.5 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க நடப்பு நிதி ஆண்டில் ரூ.87,217.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

‘பிரதம மந்திரி-கிசான்’ திட்டம் விவசாயிகளின் நிலம் பற்றிய அளவை கணக்கில் எடுக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கூடுதலாக 2 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள்.

எனவே அனைத்து மாநில அரசுகளும் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின்படி விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளை 100 சதவீதம் அடையாளம்கண்டு, அந்த விவசாயிகளின் குடும்ப விவரங்களை சேகரித்து PM - KI-S-AN என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகள் இந்த திட்டத்தின் பலனை முழுமையாக அடைய முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story