தேசிய செய்திகள்

முதலீடு பணத்துக்கு நகைகள் தருவதாக ரூ.500 கோடி மோசடி + "||" + Rs. 500 crore fraud on jewelery for investment money

முதலீடு பணத்துக்கு நகைகள் தருவதாக ரூ.500 கோடி மோசடி

முதலீடு பணத்துக்கு நகைகள் தருவதாக ரூ.500 கோடி மோசடி
பெங்களூருவில் முதலீடு பணத்துக்கு நகைகள் தருவதாக கூறி ரூ.500 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்துக்கு தங்கநகைகள் தருவதாகக் கூறி ரூ.500 கோடியை மோசடி செய்துவிட்டு நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார்.

பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவருக்கு சொந்தமான தங்க நகைக்கடை உள்ளது. இந்த கடையில், பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தனர்.


கடந்த 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு நகைக்கடை திறக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, கடந்த 4 நாட்கள் கடை திறக்கப்படவில்லை. நேற்று காலையிலும் கடை திறக்காமல் பூட்டியே கிடந்தது.

இதற்கிடையில், நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அதில், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ததில் ரூ.400 கோடி சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க்கிடம் கொடுத்திருந்தேன். தற்போது அந்த பணத்தை அவர் கொடுக்க மறுக்கிறார். பணத்தை கேட்டால், ரவுடிகள் மூலம் எனக்கும், குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுபோல, அரசு அதிகாரிகள் சிலருக்கும் பணம் கொடுத்துள்ளேன்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன், என்று கூறப்பட்டு இருந்தது. அந்த ஆடியோவை மன்சூர்கான், போலீசார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப் பியது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் பல கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு, அங்கு முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கமர்சியல்தெரு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் கூறிய தகவல்படி மன்சூர்கான் தனது கடையில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்திருந்த பணம் ரூ.500 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

அதன்பிறகு, சிவாஜிநகரில் உள்ள மண்டபத்திற்கு வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு புகார்கள் பெறப்பட்டன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கமர்சியல்தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

இந்தநிலையில், மன்சூர்கான் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே அவர் குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்சூர்கானை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மன்சூர்கானை தேடப்படும் நபராகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மன்சூர்கானின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார்.