யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடி ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2019 3:30 AM IST (Updated: 12 Jun 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

யோகி ஆதித்யநாத்தை இழிவுபடுத்தியதாக கைதான பத்திரிகையாளருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அலுவலகத்துக்கு முன்பு நின்றபடி, அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு பெண் கூறிய வீடியோவை பிரசாந்த் கனோஜியா, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். இதன்மூலம், யோகி ஆதித்யநாத்தின் நற்பெயரை களங்கப்படுத்தியதாக, பிரசாந்த் கனோஜியாவை உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். அவர் 11 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, கனோஜியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி, அவருடைய மனைவி ஜிகிஷா, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

இந்த வழக்கில் ஒருவர் 11 நாள் சிறையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்காக அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை. அத்தகைய உரிமையை மாநில அரசு பறிப்பதை ஏற்க முடியாது. ஆகவே, அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதே சமயத்தில், அவர் மீதான வழக்கு, சட்டப்படி நடக்கட்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Next Story