நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை


நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இதற்கிடையே நீட் தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 4 கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் பல மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி வாதாடுகையில், கேள்வித்தாள்களில் இருந்த சில சிக்கல்கள் பற்றி எடுத்துரைத்தார். விசாரணையில் கலந்து கொண்ட மற்றொரு வக்கீல் சவுரிஷ் கோஷ், வேறு சில மாணவர்களின் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மனுக்களின் மீதான விசாரணை அங்கு திங்கட்கிழமையன்று நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுமாறும், இந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார்கள். அதை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வக்கீல், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

Next Story