டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கை - முதல்-மந்திரிகளுக்கு மோடி வேண்டுகோள்


டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கை - முதல்-மந்திரிகளுக்கு மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2019 12:15 AM GMT (Updated: 15 Jun 2019 11:19 PM GMT)

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவும், வறட்சியை சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் முதல்-மந்திரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணியின் முதல் ஆட்சி காலத்தில், மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

2015-ம் ஆண்டு, ஜனவரி 1-ந் தேதி செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் உள்ளனர்.

நிதி ஆயோக் ஆட்சிக் குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்- மந்திரிகளும், அந்தமான் துணை நிலை கவர்னரும் இடம் பெற்றுள்ளனர்.

இப்போது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் கடந்த 30-ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணியின் 2-வது அரசு பதவி ஏற்றுள்ளது. நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளும், திட்ட செயலாக்கமும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், முதல் முறையாக நிதி ஆயோக் கின் ஆட்சிக்குழு கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளான மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), சந்திரசேகர ராவ் (தெலுங் கானா), அமரிந்தர் சிங் (பஞ்சாப்) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளான கமல்நாத் (மத்திய பிரதேசம்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), நாராயணசாமி (புதுச்சேரி) குமாரசாமி (கர்நாடகம்) ஆகியோர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசி விட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கையாக அமைந்தது.

இப்போது ஒவ்வொருவரும் இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. வறுமை, வேலை இல்லா திண்டாட்டம், வறட்சி, வெள்ளம், சுற்றுச்சூழல் மாசு, வன்முறை உள்ளிட்டவைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இங்கே கலந்து கொண்டிருக்கிற நம் ஒவ்வொருவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பொதுவான குறிக்கோள் உள்ளது.

தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மத்திய, மாநில அரசுகள் இணைந்து என்ன நிறைவேற்ற முடியும் என்பதை காட்டுகின்றன.

2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் (1 லட்சம் கோடி டாலர் என்பது சுமார் ரூ.70 லட்சம் கோடி) என்ற குறிக்கோளை அடைவது என்பது சவாலானது. ஆனால் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிச்சயம் அதை சாதித்துக்காட்ட முடியும்.

மாநிலங்கள் அவற்றின் முக்கிய திறனை அங்கீகரிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (பொருளாதார வளர்ச்சியை) மாவட்ட அளவில் இருந்து உயர்த்தும் வகையில் மாநிலங்கள் செயல்பட வேண்டும்.

வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்தில் ஏற்றுமதி துறை முக்கிய பங்களிப்பு செய்கிறது. தனிநபர் வருமானத்தை உயர்த்துகிற வகையில், ஏற்றுமதி வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து உழைக்க வேண்டும். வட கிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயன்படுத்தப்படாத திரளான வளங்கள் இருக்கின்றன.

மாநில அளவில் ஏற்று மதியை ஊக்குவிப்பதற்கான உந்துதல் வேண்டும். இது, வருமானத்தை பெருக்கவும், வேலை வாய்ப்புகளைப் பெருக் கவும் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

வாழ்க்கையின் முக்கிய அங்கமாக தண்ணீர் திகழ்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜலசக்தி துறை (நீர்சக்தி துறை), தண்ணீரைப் பொறுத்தமட்டில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழங்க உதவும்.

தண்ணீர் பாதுகாப்புக்கும், தண்ணீர் மேலாண்மைக்கும் மாநிலங்கள் தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இருக்கிற தண்ணீர் வளங்களை சரியாக நிர்வகிப்பது மிக முக்கியமானது. 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க இலக்கு வைத்திருக்கிறோம்.

நீர்வள பாதுகாப்பு, நிர்வாகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடங்கள் கட்டும் சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும். பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டத்தை மிகவும் கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

வறட்சியை சமாளிப்பதற்கு தேவையான வலுவான, துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தை இன்னும் கூடுதலான பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்க வேண்டும். அந்த வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை பயிர்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

விவசாயிகளை மையமாக வைத்து செயல்படுத்துகிற திட்டங்கள், உண்மையான பயனாளிகளை சரியான நேரத்தில் சென்று அடைய வேண்டும். விவசாயத்தை பொறுத்தமட்டில் கட்டமைப்பு சீர்திருத்தம் வேண்டும்.

பெரு நிறுவனங்களின் முதலீட்டை பெருக்க வேண்டும். தளவாடங்களை வலுப்படுத்த வேண்டும். போதுமான சந்தை ஆதரவை வழங்க வேண்டும்.

உணவு பதப்படுத்தும் தொழில் துறை, உணவு தானிய உற்பத்தி துறையை விட வேகமான வளர்ச்சி பெற வேண்டும்.

நல்ல நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. புதுமையான சேவை வழங்கல் முயற்சிகள் நல்ல பலன்களை தந்துள்ளன.

நக்சலைட்டுகள் வன்முறையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் வன்முறைக்கு எதிரான நடவடிக்கை இப்போது ஒரு முடிவான கட்டத்தில் உள்ளது. வன்முறை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.

சுகாதார துறையைப் பொறுத்தமட்டில் 2022-ம் ஆண்டுக்குள் பல இலக்குகளை மனதில் கொள்ள வேண்டும். காசநோயை 2025-க்குள் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும். பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் கூடிய விரைவில் அமல்படுத்த வேண்டும்.

செயல்திறன், வெளிப்படைத் தன்மை, வழங்கல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஒரு நிர்வாக முறையை நோக்கி நாங்கள் இப்போது நடை போட்டுக்கொண்டிருக்கிறோம்.

திட்டங்களையும், முடிவுகளையும் சரியாக செயல்படுத்துவது என்பது மிகவும் முக்கியம்.

நிதி ஆயோக் உறுப்பினர்கள் அனைவரும், செயல்படுகிற, மக்கள் நம்பிக்கையைப் பெறுகிற அரசை உருவாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story