நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா? ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு - பிரதமர் மோடி அறிவிப்பு


நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா? ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு - பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2019 12:15 AM GMT (Updated: 19 Jun 2019 9:48 PM GMT)

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா? என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற குரல் சமீப காலமாக வலுத்து வருகிறது.

இந்த குரலை 2010-ம் ஆண்டு முதலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி எழுப்பினார். இது தொடர்பாக அவர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசினார். இருப்பினும் இதில் அப்போது அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது அதை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்துள்ளார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அவரது முழக்கமாக அமைந்துள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிறபோது, பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிற நமது நாடு அடிக்கடி தேர்தல் நடத்தும் நிலையில் இருந்து விடுபட முடியும் என்பது அவரது நம்பிக்கை.

அதுமட்டுமின்றி பல்லாயிரம் கோடி பணத்தை சேமிக்க முடியும்; அரசு ஊழியர்கள் தொடங்கி பாதுகாப்பு படையினர் வரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தாமல், அவர்கள் பணியை அவர்கள் சிறப்பாக செய்ய வழிவிட முடியும்; நேரமும் மிச்சமாகும், நாட்டுக்கு நல்லது என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என மத்திய சட்ட கமிஷனும் சிபாரிசு செய்தது. 2024-ம் ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தலாம் என நிதி ஆயோக்கும் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் இப்படி செய்வதற்கு அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் உள்ளது. அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும். எனவேதான் இதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது.

இது பற்றி விவாதிப்பதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இடம் பெற்றிருக்கிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இந்த கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

அரசியல் கட்சி தலைவர்கள் சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதாதளம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலிதளம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), கொனார்ட் சங்மா (தேசிய மக்கள் கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி (காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), மாயாவதி (பகுஜன் சமாஜ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சந்திரசேகரராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி). சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) உள்பட பலர் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும் சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் தங்கள் கட்சி பிரதிநிதிகளை கூட்டத்தில் பங்கேற்க செய்தனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும், நவனீதகிருஷ்ணன் எம்.பி.யும் கலந்து கொள்ளச்சென்றதாகவும், ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

முடிவில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

கூட்டம் முடிந்த உடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், “கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் பலவும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கு ஆதரவு தெரிவித்தன” என்றார்.

அதே நேரத்தில், “இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இதை நடைமுறைப்படுத்துவது குறித்து தங்களது கவலைகளை தெரிவித்தன” என ராஜ்நாத் சிங் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை பிரதமர் மோடி அமைக்கிற குழு ஆராயும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story