ஆணவக்கொலை தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் பேச்சு


ஆணவக்கொலை தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 2 July 2019 1:15 AM IST (Updated: 2 July 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆணவக்கொலை தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் பேசினார்.

புதுடெல்லி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நேற்று நாடாளுமன்றத்தில் ஆணவக்கொலைகளை எதிர்த்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆணவக்கொலை என்ற தேசிய அவமானம் நாடு முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அண்மையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்சினி பிரியா என்ற இளம்பெண்ணையும், அவள் திருமணம் செய்துகொண்ட கனகராஜ் என்ற இளைஞனையும் கொடூரமாக அவனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். சாதி கவுரவம் என்கிற வறட்டுக் கவுரவத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலும் கலப்பு திருமணம் செய்துகொண்ட பெண் அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது நாள்தோறும் நாடு முழுவதும் நடந்து வருகிற ஒரு கொடூரமான குற்றச் செயலாகும்.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி, இந்திய சட்ட கமிஷன் ஆணவக்கொலை குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசிடம் வழங்கி இருக்கிறது. அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.


Next Story