பாட்டில் தண்ணீர் கூடுதல் விலைக்கு விற்பனையா? - மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மத்திய அரசு


பாட்டில் தண்ணீர் கூடுதல் விலைக்கு விற்பனையா? - மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்கிறது மத்திய அரசு
x
தினத்தந்தி 3 July 2019 4:15 AM IST (Updated: 3 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் பாட்டில் தண்ணீர், பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால், மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு கூறுகிறது.

புதுடெல்லி,

பாட்டில் தண்ணீர், பானங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் என எந்தவொரு பொருளுக்கும் ‘எம்.ஆர்.பி.’ என்னும் அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டு, அது அந்தப் பொருட்களின்மீது குறிப்பிடப்படுகிறது.

ஆனால் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமானநிலையங்கள், ஓட்டல்கள், பன்னடுக்கு திரையரங்குகள் ஆகியவற்றில், இந்த ‘எம்.ஆர்.பி.’ விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு, ஏன் இரு மடங்கு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு விலைக்கு கூட பாட்டில் தண்ணீர், பானங்கள், தின்பண்டங்களை விற்பனை செய்கின்றனர்.

‘காம்போ’ என்ற பெயரில் குளிர்பானம், பாப்கார்ன் போன்ற உணவு பொருள் என இரண்டையும் இணைத்து அநியாய விலைக்கு விற்பதுவும் நடக்கிறது. இதனால் சாமானிய மக்கள் இவற்றை வாங்க முடியாமல் தவிக்கிற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இந்த மக்கள் பிரச்சினை, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாட்டில் குடிநீர், பானங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் அதிகபட்ச சில்லரை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

ஆனால் அதிகபட்ச சில்லரை விலைக்கு அதிகமாக இப்படி பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதற்கு 2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட அளவீட்டு சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த சட்ட விதிமுறைகளை மாநில அரசுகளின் சட்ட அளவீட்டு துறைதான் நடைமுறைப்படுத்துகிறது. எனவே விதிமீறல்களுக்கு அவர்கள் அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story