கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு


கர்நாடக விவகாரம் மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. 2–வது நாளாக வெளிநடப்பு
x
தினத்தந்தி 11 July 2019 1:00 AM IST (Updated: 11 July 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி, 

கர்நாடக விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர்.

ஆட்சியை கவிழ்க்க சதி

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தொடர்ந்து 3–வது நாளாக கர்நாடக விவகாரத்தை எழுப்பினார்.

அவர் பேசியதாவது:–

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் ராணுவ சட்டம் பின்பற்றப்படுவது போல் தெரிகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள மும்பை ஓட்டலுக்குள் நுழையவிடாமல், கர்நாடக மந்திரி டி.கே.சிவகுமாரை தடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மந்திரி பதில்

அவரது குற்றச்சாட்டை நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி மறுத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு காங்கிரஸ் பிரமுகர்களால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு அளிக்கும்படியும் மும்பை போலீஸ் கமி‌ஷனரிடம் கடிதம் கொடுத்துள்ளனர் (அந்த கடிதத்தை காண்பித்தார்). எனவே, போலீசார் தங்களது கடமையை செய்துள்ளனர்.

கர்நாடக விவகாரம், ராகுல் காந்தியால்தான் உருவாக்கப்பட்டது. அவரை பின்பற்றியே மற்றவர்களும் ராஜினாமா செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநடப்பு

மந்திரியின் விளக்கத்தால் திருப்தி அடையாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோ‌ஷம் எழுப்ப தொடங்கினர். ‘நீதி வேண்டும்’, ‘ஜனநாயகத்தை காப்பாற்று’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்களும், சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் காங்கிரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் சில காகிதங்களையும் சபையில் காண்பித்தனர்.

பின்னர், காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் 2–வது நாளாக வெளிநடப்பு செய்தனர். நேற்று முன்தினம் வெளிநடப்பில் பங்கேற்காத திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் நேற்று வெளிநடப்பு செய்தனர்.


Next Story