விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்


விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்?  ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 July 2019 11:30 PM GMT (Updated: 12 July 2019 11:28 AM GMT)

நாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங்-ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் நிலைமை குறித்து பிரச்சினை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

நாடு முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் விவசாயிகள் நிலைமை படுமோசமாக இருக்கிறது. அங்கு 18 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனது தொகுதியான வயநாட்டில் நேற்று ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

வயநாட்டில், கடனை திருப்பிச் செலுத்தாததற்காக சுமார் 8 ஆயிரம் விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையாக, விவசாயிகளின் நிலங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்க உள்ளன.

தொழிலதிபர்களை விட குறைவா?

இதனால் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். அவர்கள் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், இந்த அரசு, பெரும் தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா?

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். அவற்றை அவர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பதில் அளித்தார். அவர் பேசியதாவது:-

விவசாயிகளின் தற்போதைய நிலைமை கடந்த 2 அல்லது 4 ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. பத்தாண்டுகளாக இந்த நாட்டை ஆண்டவர்கள்தான் விவசாயிகள் நிலைமைக்கு காரணம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புதான், விவசாயிகள் தற்கொலை சம்பவம் அதிக அளவில் நடந்தது. மோடி ஆட்சியில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மோடி அரசு போல், இதற்கு முன்பு எந்த அரசும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுத்தது இல்லை. விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாயிகள் எவ்வளவு நிலம் வைத்திருந்தாலும், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகளின் வருமானம் 20 முதல் 25 சதவீதம் உயர்ந்து இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

அவரது பேச்சுக்கு ஆளும் பா.ஜனதா உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தரப்பில் இருந்து எதிர்ப்பு கோஷம் போட்டனர்.

கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கட்சி தாவல் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்ப முயன்றனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

அதையடுத்து, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Next Story