பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி சந்திப்பு


பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
x
தினத்தந்தி 20 July 2019 7:15 AM GMT (Updated: 20 July 2019 7:15 AM GMT)

சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் பலியான பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்தார்.

மிர்சாபூர்,

உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்சினையால் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் பாஜகவையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சித்தார். உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர் கெட்டு வருவதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாகவும் பிரியங்கா கூறியிருந்தார். 

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி, நேற்று நேரில் சென்றார்.  முதலில் வாரணாசி சென்றிறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால், அவரை பாதியிலேயே உத்தர பிரதேச போலீஸ் தடுத்து நிறுத்தியது. சோன்பத்ராவுக்குப் போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால், சாலையில் இறங்கி அமர்ந்துவிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார்  அருகில் உள்ள சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர். 

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட தெரிவித்து விட்டார். இந்த நிலையில், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை பிரியங்கா சந்தித்தார். விருந்தினர் மாளிகைக்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வருகை வந்தனர். விருந்தினர் மாளிகையில் வைத்து குடும்பத்தினரை சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களை மட்டுமே எனக்கு சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஏனைய 15 பேர் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

Next Story