மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது: மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை


மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது: மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 5 Aug 2019 4:45 AM IST (Updated: 5 Aug 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் ஒருவன் அடித்துச்செல்லப்பட்டான்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பை, தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் மழையால் பெருமளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த பருவமழை இடையில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வலுவடைந்திருக்கிறது.

அதன்படி மும்பை, நவி மும்பை மற்றும் தானே, நாசிக், பால்கர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மும்பை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் 100 மி.மீ. மழையும், தானே மற்றும் நவி மும்பை பகுதிகளில் 250 மி.மீ. மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

மும்பை வாசிகளின் நேற்றைய அதிகாலை கனமழையுடன் விடிந்தது. ஏற்கனவே பெய்த மழையால் பெரும் பாதிப்பை சந்தித்த அவர்கள், மீண்டும் மழை தொடங்கியதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த மழையால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் அலுவலக பணியாளர்கள் தப்பினர். ஏனெனில் நேற்று பகலிலும் தொடர்ந்து கனமழை கொட்டியதால், ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் காலை 8 மணியில் இருந்து பல பகுதிகளில் உள்ளூர் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதைப்போல ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் மற்றும் புனே மாவட்டத்தின் லோனவாலா பகுதிகளுக்கு இடையே தண்டவாளம் சேதமடைந்திருப்பதால் மும்பை செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. புனே-மும்பை ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

மேலும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும் புறப்படும் விமானங்களிலும் சில ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

பலத்த காற்றுடன் கனமழை கொட்டுவதால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கடலும் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த கனமழைக்கு உயிர்ச்சேதம் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. எனினும் பல்கார் மாவட்டத்தின் விகரம்கட் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான். அவனை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

இதற்கிடையே கனமழை காரணமாக மராட்டியத்தின் பல அணைகள் நிரம்பியுள்ளதால், உபரி நீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மித்தி, பார்வி, உல்காஸ் போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.

இந்த வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளதால் ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். அந்தவகையில் தானே மாவட்டத்தின் கதவலி பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 16 குழந்தைகள் உள்பட 58 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

நாசிக் மாவட்டத்தில் பல அணைகள் நிரம்பியுள்ளதால் அவற்றின் தண்ணீர் அவுரங்காபாத் மாவட்டத்தின் ஜெயக்வாடி அணைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் கோதாவரி ஆற்றில் 13 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் பல இடங்களில் கோவில்கள் நீரில் மூழ்கி உள்ளன.

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கு ஆந்திராவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. குறிப்பாக தேவிபட்டணத்தில் 32 கிராமங்கள் நீரில் மூழ்கி இருக்கும் நிலையில், போலாவரம், வெருபாடு மற்றும் குக்குருனுரு மண்டலங்களில் 22 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கிராமங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதைப்போல குஜராத்தின் தெற்கு பகுதியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நவ்சாரி, டாங்ஸ், வல்சாத், சூரத் போன்ற மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அம்பிகா, பூர்ணா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே அங்கு வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் நவ்சாரி மாவட்டத்தின் மெந்தர் கிராமத்தில் இரால் பண்ணை ஒன்றில் சிக்கியிருந்த 45 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.


Next Story