ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது - உத்தவ் தாக்கரே கருத்து


ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:  இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது - உத்தவ் தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 6 Aug 2019 3:00 AM IST (Updated: 6 Aug 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது என உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின்படி வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்து இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தனது ‘மாதோ?’ இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்து உள்ளது. மறைந்த தலைவர்களான பால்தாக்கரே, வாஜ்பாய் ஆகியோரின் கனவுகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மிகப்பெரிய கனவு உண்மையானதில், நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நமது நாடு முழு சுதந்திரம் அடைந்து உள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் வெறுப்புகளை ஒதுக்கிவைத்து விட்டு, நாட்டின் இறையாண்மைக்கு ஆதரிக்க வேண்டும். இந்த முடிவை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசு வலுவாக உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகள் எங்கள் உள்விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். பாகிஸ்தான் ஆக்கிரமித்த பிரதேசத்தை நாங்கள் இனி கேட்க விரும்பவில்லை. பாகிஸ்தானையே ஆக்கிரமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இது இந்தியாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம். 370-வது பிரிவை நீக்கியதின் மூலம் இந்தியாவின் ஒரு உண்மையான பகுதியாக காஷ்மீர் மாறி உள்ளது. தேச விரோத பிரிவினைவாதிகளுக்கான பாதை மூடப்பட்டு உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், ‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன சட்டப்பிரிவின் 35ஏ-வை தொடுபவர்கள் எரிக்கப்பட வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறியுள்ளார். இது பயங்கரவாதத்தின் மொழி. அவரை புதிதாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்ப வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story