கர்நாடகாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய முதல்-மந்திரி மகள்


கர்நாடகாவில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய முதல்-மந்திரி மகள்
x
தினத்தந்தி 10 Aug 2019 3:39 AM IST (Updated: 10 Aug 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முதல்-மந்திரி மகள் சிக்கினார்.

பெங்களூரு,

இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குரின் 2-வது மகள் அவந்திகா சூட் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான குகை கோவிலை பார்வையிடுவதற்காக அவந்திகா சூட், சக மாணவிகளுடன் சொகுசு பஸ்சில் உடுப்பியில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றார்.

மாணவிகள் சென்ற சுற்றுலா பஸ் பெல்காம் மாவட்டத்தின் மலப்பிரபா ஆற்றில் பெருக்கெடுத்த ஓடிய வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அவந்திகா சூட் உள்பட 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் பஸ்சில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதையடுத்து, உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் மாணவிகளை மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

வெள்ளத்தில் சிக்கி தவித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று தெரிவித்துள்ள அவந்திகா சூட், தனக்கு உதவிய உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story