வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பலாம் - ரெயில்வேதுறை அறிவிப்பு


வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பலாம் - ரெயில்வேதுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2019 11:15 PM GMT (Updated: 11 Aug 2019 9:10 PM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் அனுப்பலாம் என ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இந்த மாநிலங்களின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கேரளாவில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்த மழை வெள்ளம் காரணமாக இந்த மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு இன்னும் வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அரசும், தன்னார்வ அமைப்புகளும் வழங்கி வருகின்றன. இவை அந்தந்த மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பொருட்களை ரெயில்களில் அனுப்பினால் அவற்றை இலவசமாக கொண்டு சேர்க்க மத்திய ரெயில்வே அமைச்சகம் அனுமதித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து பொது மேலாளர்களுக்கும் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் அறிவிப்பு வழங்கப்பட்டது.

அதன்படி கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு ரெயில்களில் இலவசமாக நிவாரண பொருட்கள் (மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும்) அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சரக்கு ரெயில்களிலும், பயணிகள் ரெயில்கள் மூலமும் இவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு அமைப்புகள் மற்றும் மண்டல ரெயில்வே மேலாளர்களால் அனுமதிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் மேற்படி 3 மாநிலங்களுக்கும் இலவசமாக பொருட்கள் அனுப்பலாம். இந்த பொருட்களுக்கு போக்குவரத்து கட்டணம் மட்டுமின்றி, வேறு எந்தவித துணை கட்டணமும் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் பொருட்கள் அனுப்புபவர் அல்லது பெற்றுக்கொள்பவர் மாவட்ட கலெக்டராகவோ அல்லது துணை கமிஷனராகவோ இருப்பதுடன், அவர்களது அதிகார எல்லைக்குள் இருந்து அனுப்புதல் அல்லது பெறுதலை உறுதி செய்ய வேண்டும் என ரெயில்வே அறிவித்து உள்ளது.

இந்த இலவச வசதி இந்த மாதம் 31-ந்தேதி வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை (இதில் முதலில் வரும் காலக்கெடு வரை) அமலில் இருக்கும் என ரெயில்வே துறையின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story