கேரளாவில் வெள்ளம்; கடந்த 5 நாட்களில் 83 பேர் பலி


கேரளாவில் வெள்ளம்; கடந்த 5 நாட்களில் 83 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2019 4:12 PM GMT (Updated: 12 Aug 2019 4:12 PM GMT)

கேரளாவில் கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் பலியாகி உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழை தொடங்கி தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்கு பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்துக்கு அந்த தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி இன்று சென்றார்.  அங்கு அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நேற்று, மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பொதுகல்லுவில்  அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர் அங்கு தங்கி  இருந்தவர்களிடம் பாதிப்பை கேட்டறிந்தார்.  இந்நிலையில், 2வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுல் காந்தி, நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

இங்கு இதுவரை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது.  பலர் வீடுகளை இழந்துள்ளனர்.  2.87 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  காணாமல் போன 58 பேரில் 50 பேர் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள்.  இந்த பகுதியில் 24 பேர் பலியாகி உள்ளனர்.  இது கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையாகும்.

இதேபோன்று கடும் மழை பொழிவினால் இன்று 4 ரெயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கேரள பல்கலைக்கழகம் ஆகஸ்டு 23ந்தேதிக்கு அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது.  இதனிடையே, கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் வெள்ள பாதிப்பில் சிக்கி 83 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story