தேசிய செய்திகள்

உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி + "||" + 9 die in landslides in U'khand, JK

உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி
உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் நந்தாகினி ஆற்றின் துணை ஆறான சுப்லகாட் ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. ஏற்கனவே அந்த ஆற்றின் கரையோரம் இருந்த 2 கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சில நொடிகளில் ஆற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்தன.


அந்த கட்டிடங்களில் இருந்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே சாமோலி மாவட்டத்தில் மலைப்பாதையில் உள்ள பஞ்ஜாப்காட், அலிகான், லாங்கி ஆகிய 3 கிராமங்களில் பலத்த மழை காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 கிராமங்களிலும் தலா ஒரு வீடு மீது மண் சரிந்து விழுந்தது. இதில் அந்த 3 வீடுகளும் முழுமையாக மண்ணால் மூடப்பட்டது.

இதில் பஞ்ஜாப்காட் கிராமத்தில் ரூபாதேவி என்ற பெண்ணும் அவரது 9 மாத பெண் குழந்தையும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். அலிகான் கிராமத்தில் நவுரதி தேவி (வயது 21) என்ற பெண்ணும், லாங்கி கிராமத்தில் ஆர்த்தி, அஞ்சலி, அஜய் என்ற 3 பேரும் பலியானார்கள்.

இவர்கள் 6 பேர் தவிர, அவர்கள் வளர்த்து வந்த சுமார் 40 ஆடுகளும் இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தன. மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் மஹோர் வனப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். லார் என்ற கிராமத்தை சேர்ந்த மெஹ்தாப் பேகம் (55) தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு பெரிய பாறாங்கல் அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இதில் மெஹ்தாப் பேகம், அப்துல் லத்தீப் (25), பஷீர் அகமது (37) ஆகிய 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். மெஹ்தாப் பேகத்தின் மகன்கள் நவாப்தீன், ‌ஷபிர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

3 பேரின் உடல்களையும் மீட்ட வனத்துறையினர், காயமடைந்த 2 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் ஜம்முவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.