கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு - இயல்பு வாழ்க்கை முடங்கியது


கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு - இயல்பு வாழ்க்கை முடங்கியது
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 9:18 PM GMT)

கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, உப்பள்ளி-தார்வார், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெலகாவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் வடகர்நாடக மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மழை நின்றாலும் வடகர்நாடக மாவட்டங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.

மேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிராமங்கள் இருளிலும் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ படைவீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணா, பீமா ஆற்றில் வெள்ள பெருக்கு குறைந்தாலும் துங்கபத்ரா ஆற்றில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அருகே விருபாபுராவில் உள்ள சுற்றுலா தளத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை மீட்க சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 5 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பின்னர் 5 பேரையும் மீட்பு படையினர் போராடி மீட்டனர். அதுபோல, சுற்றுலா தலத்தில் சிக்கிய 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 42 பேர் உயிர் இழந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் பெய்த மழையால் 12 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

மழை குறைந்திருப்பதால் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி 17 மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று மழை பாதித்த உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களை முதல்-மந்திரி எடியூரப்பா பார்வையிட்டார்.


Next Story