உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி


உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 21 Aug 2019 4:11 AM GMT (Updated: 2019-08-21T09:41:48+05:30)

அரசுக்கு எதிராக உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம்.  மத்திய நிதி மந்திரியாக அவர் இருந்தபோது 2007-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ.305 கோடி அளவில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தன.

இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில்கவுர் நேற்று தீர்ப்பு அளித்தார். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் இல்லத்திற்கு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.  ஆனால் அவர் அங்கு இல்லை.  இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு நேற்று இரவு 11.30 மணிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ப. சிதம்பரம் சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்றனர்.

தொடர்ந்து டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சென்றுள்ளனர்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற மேலவையின் தகுதி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க உறுப்பினர் ப. சிதம்பரம்.  நிதி மற்றும் உள் துறை மந்திரி உள்பட பல தசாப்தங்களாக நாட்டுக்கு விசுவாசமுடன் பணியாற்றியவர்.

அரசுக்கு எதிராக தயக்கமின்றி உண்மைகளை பேசியவர்.  அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியவர்.  ஆனால் அந்த உண்மைகள் கோழைகளுக்கு அசவுகரியம் ஏற்படுத்தி விட்டது.  அதனால் அவர் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகின்றார்.  அவருக்கு துணையாக நாங்கள் இருப்போம்.  விளைவுகள் எதுவாக இருப்பினும், உண்மைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.

Next Story