சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்தது


சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்தது
x
தினத்தந்தி 2 Sept 2019 2:11 PM IST (Updated: 2 Sept 2019 2:11 PM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2  விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான்-2  விண்கலமானது,  ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்க துவங்கியது. 

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து நிலவை சுற்றி வருகிறது.  அதன்பின் நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்ட பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நேற்று, சந்திரயான்-2  விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 5-வது மற்றும் இறுதி முறையாக மாற்றியமைக்கப்பட்டது. 

இந்நிலையில், சந்திரயான்-2  விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் ’விக்ரம்’ வெற்றிகரமாக பிரிந்துள்ளது. இந்த லேண்டர் கருவி நிலவின் சுற்றுப்பகுதியின் 100 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நிலவின் சுற்றுவட்ட பாதையிலிருந்து முன்னேறியபடியே, வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் பிறகு லேண்டரில் உள்ள ரோவர் மூலம் நிலவில் ஆய்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.


Next Story