அட்டாக் பாண்டியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு - பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்


அட்டாக் பாண்டியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்பு - பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 14 Sept 2019 2:31 AM IST (Updated: 14 Sept 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில், அட்டாக் பாண்டியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. மேலும் பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

புதுடெல்லி,

மதுரையில் ‘தினகரன்’ பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு 2009-ம் ஆண்டு விடுதலை செய்ததை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து அட்டாக் பாண்டி, ஆரோக்கிய பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்ஷா ஆகிய 9 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களுக்கு தலா 3 ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை விதித்தது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அட்டாக் பாண்டி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.பசந்த், வக்கீல் ரகுநாத் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும், மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும், அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள். அத்துடன் மனுவின் மீது பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story