பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது: வைகோ வழக்கு காரணமா? - காங்கிரஸ் கேள்வி


பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது: வைகோ வழக்கு காரணமா? - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 17 Sep 2019 8:45 PM GMT (Updated: 17 Sep 2019 8:43 PM GMT)

பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு வைகோ வழக்கு காரணமா என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லா (வயது 81) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பரூக் அப்துல்லாவை ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான கபில் சிபல், “43 நாட்களுக்கு பின்னர் இப்போது பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பரூக் அப்துல்லா கைது என்கிறீர்கள். ஆனால் முதலில் காஷ்மீரில் 92 சதவீத மக்கள் சிறப்பு அந்தஸ்து ரத்தை வரவேற்பதாகவும், இயல்பு நிலை நிலவுவதாகவும் பாரதீய ஜனதா கட்சி கூறியது. பரூக் அப்துல்லா பிடிக்கப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார். பொது பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என்றால், ஏன் இப்போது பரூக் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்ட வழக்கு? வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததுதான் காரணமா?” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.


Next Story