மராட்டியத்தில் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - அரியானாவில் 5 இடங்களில் பேச ஏற்பாடு


மராட்டியத்தில் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - அரியானாவில் 5 இடங்களில் பேச ஏற்பாடு
x
தினத்தந்தி 7 Oct 2019 5:00 AM IST (Updated: 7 Oct 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

2 மாநில தேர்தல் பிரசார வியூகம் அமைப்பதில் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. மராட்டியத்தில் 10 கூட்டங்களிலும், அரியானாவில் 5 இடங்களிலும் பிரதமர் மோடி பேச ஏற்பாடு நடக்கிறது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலங்களில் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி வரிந்து கட்டுகிறது.

பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகிய இரு தலைவர்களின் பிரசார திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி மராட்டியத்தில் 10 கூட்டங்களிலும், அரியானாவில் 5 கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது.

அமித்ஷா, மராட்டியத்தில் 20 கூட்டங்களிலும், அரியானாவில் 10 கூட்டங்களிலும் கலந்து கொண்டு ஆதரவு திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரசார வியூகம் வகுப்பதிலும் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தேசிய பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று வெற்றிக்கனியை பறிப்பது பாரதீய ஜனதா கட்சியின் திட்டமாக உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளின் எளிய தாக்குதல் இலக்காக இருந்து வந்த காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த விவகாரம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச்செல்ல பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தமட்டில் பாரதீய ஜனதா கட்சி பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களிடம் கூற திட்டமிட்டுள்ளன.

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சரி, அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரும் சரி எந்த விதமான புகாருக்கு ஆளாகாத நிலையில் ஆட்சி நடத்துவதால் அது பாரதீய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மராட்டியத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி 200 இடங்களையும் (மொத்த இடங்கள் 288), அரியானாவில் 75 இடங்களையும் (மொத்த இடங்கள் 90) பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடைகிற வகையில் தேர்தல் பிரசார களத்தை அமைப்பதில் பாரதீய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.


Next Story