ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு


ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2019 11:31 AM IST (Updated: 7 Oct 2019 11:31 AM IST)
t-max-icont-min-icon

ஆரே காலனியில் மரங்கள் வெட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

மும்பையில் கொலபா-பாந்திரா-சீப்ஸ் இடையே செயல்படுத்தப்படும் 3வது மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் பணிமனை பசுமை நிறைந்த ஆரே காலனியில் அமைய உள்ளது. இதற்காக அங்குள்ள 2,700 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மும்பை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே அங்கு மரங்களை வெட்டும் பணியில் மும்பை மெட்ரோ ரெயில் கழகம் இறங்கியது.

இதையறிந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆரே காலனியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரங்கள் வெட்டப்பட்டன.  ஆரே காலனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2வது நாளாக நேற்று மரங்கள் வெட்டப்பட்டன.

இதனிடையே, ஆரே காலனியில் மரங்களை வெட்ட வேண்டாம் என மகாராஷ்டிர அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு இன்று கேட்டு கொண்டது.  இதற்கு மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா மரங்கள் வெட்டப்படாது என்று சுப்ரீம் கோர்ட்டு அமர்விடம் உறுதி கூறினார்.

இதேபோன்று கைது செய்யப்பட்ட ஆர்வலர்களையும் விடுவிக்கும்படி நீதிமன்றம் கேட்டு கொண்டது.  இதன்படி, கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாதவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவர் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கட்சிக்காரராக சேர்க்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேட்டு கொண்டதுடன் வழக்கை வருகிற 21ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story