9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்


9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 4:30 AM IST (Updated: 9 Oct 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 106 மத்திய சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், 65 நாட்களாகியும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மத்திய அரசு, பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது.

மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்தை தொடர்ந்து, காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-

370-வது பிரிவு நீக்கப்படுவதற்கு முன்பு, காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவது குறைவான அளவிலேயே இருந்தது. காஷ்மீர் சட்டசபை, அந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவற்றை அங்கு அமல்படுத்த முடியும். இதனால் பெரும்பாலான சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. ஆகவே, இந்த சட்டங்களால் கிடைக்கும் பலன்களை காஷ்மீர் மக்கள் அனுபவிக்க முடியவில்லை.

கடுமையான சட்டங்கள் இல்லாதது, ஊழலுக்கு வழிவகுத்தது. மத்திய அரசு நிதியின் பெரும்பகுதி, ஏழைகளை சென்றடையவில்லை. இதனால், அதிக நிதி ஒதுக்கினாலும், களத்தில் குறைவான தாக்கமே காணப்பட்டது.

ஆனால், இப்போது 370-வது பிரிவு நீக்கப்பட்டதால், ஊழலுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும். 106 மத்திய அரசு சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும்.

தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், கல்வி உரிமை சட்டம், பெற்றோர் பராமரிப்பு-நலவாழ்வு சட்டம், பெண்கள்-குழந்தைகள்-மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் சட்டங்கள், ஊழலை காட்டிக்கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தும்.

இதன் காரணமாக, ஒளிவுமறைவற்ற தன்மையும், பொறுப்புடைமையும் அதிகரிக்கும். மக்களுக்கு ஒதுக்கப்படும் பணம், உண்மையான பயனாளிகளுக்கு போய்ச் சேரும்.

அனைவருக்குமான கல்வித்தரம் உயரும். குறிப்பாக, ஏழைக் குழந்தைகளிடம் கல்வி சென்றடையும். கல்வி, தொழில் வளம், சுற்றுலா ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story