இஸ்ரோ: 3 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட இருக்கும் 14 சர்வதேச செயற்கைகோள்கள்
இஸ்ரோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் 14 சர்வதேச செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. எடை குறைந்த விண்கலமான கலாம்சாட்-வி2, மிக குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான், நிலவை ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான்-1, 2 உள்பட பல விண்கலங்களை விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
ஆராய்ச்சிக்காக செலுத்தப்படும் விண்கலங்கள் தவிர, வணிக ரீதியிலும் இஸ்ரோ நிறுவனம் விண்கலங்களை செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம், ஒரே ராக்கெட்டில் பல நாடுகளுக்கு சொந்தமான 104 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்தது. இதன் மூலம் விண்வெளி வணிகச் சந்தையில் இந்தியா தனக்கென முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பி.எஸ்.எல்.வி-சி47, சி48 மற்றும் சி49 ஆகிய மூன்று ராக்கெட்டுகள் மூலம், 14 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த 14 செயற்கைகோள்களும் 4 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமானவை ஆகும்.
“ஸ்பேஸ்ஃப்ளைட்” என்ற அமெரிக்க நிறுவனம் இது போன்ற விண்கலங்கள் ஏவும் திட்டங்களை, ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து பல சர்வதேச நிறுவனங்களின் செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் இந்த 14 செயற்கைகோள்களும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி47, சி48 மற்றும் சி49 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன. இந்த மூன்று ராக்கெட்டுகளிலும் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்று இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story