வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Nov 2019 6:19 PM GMT (Updated: 1 Nov 2019 6:19 PM GMT)

வாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘வாட்ஸ்-அப்’ செயலி, தகவல்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்கு பயன்படுகிறது. உலகம் முழுவதும் 150 கோடி பேர் ‘வாட்ஸ்-அப்’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ்-அப் தகவல்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் மூலம் உளவு பார்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வரும், நவம்பர் 4-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு, 'வாட்ஸ் -அப்' நிர்வாகத்துக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மத்திய அரசை குற்றம் சாட்டி டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகையாளர்கள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் 'வாட்ஸ்-அப்' தகவல்களை உளவு பார்க்க, இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டிருந்தால், அது மிகப்பெரிய மனித உரிமை மீறல்; தேசிய பாதுகாப்புக்கும் எதிரானது. இவ்விவகாரத்தில் அரசின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story