ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்


ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம்
x
தினத்தந்தி 2 Nov 2019 5:00 AM IST (Updated: 2 Nov 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (சனிக் கிழமை) தாய்லாந்து செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலை அவர் வெளியிடுகிறார்.

புதுடெல்லி,

இந்தியா-ஆசியான் மாநாடு தாய்லாந்தில் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதைப்போல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) பாங்காக் புறப்பட்டு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார். மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் ‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.

பின்னர் 3-ந்தேதி நடைபெறும் இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்வின்போது பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

பாங்காக்கில் நடைபெறும் ஆசியான் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளின் முக்கியமான பகுதி என வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் விஜய் தாகூர் தெரிவித்தார்.

அதேநேரம் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பு விவகாரத்தில் சில சிக்கலான பிரச்சினைகள் இருப்பதாக கூறிய அவர், அவற்றை களைவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நமது பொருளாதாரம் மற்றும் நமது மக்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும் விஜய் தாகூர் குறிப்பிட்டார்.

1 More update

Next Story