அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் - முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு


அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் - முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 2019-11-07T03:00:34+05:30)

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது.

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய வழக்கு, அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்து வந்தது. அந்த நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் சமரச முயற்சிக்கு 3 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. ஆனால், சமரச முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தினந்தோறும் விசாரணை நடத்த முடிவு செய்தது. 40 நாட்களாக தொடர்ந்து நடந்த விசாரணை, கடந்த மாதம் 16-ந் தேதி முடிவடைந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வின் தலைவரான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, 17-ந் தேதிக்கு முன்பாக, தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைதியை பராமரிக்க 16 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதை கண்காணிக்க தனியாக தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கத்தில், முஸ்லிம் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா இ ஹிந்த்தின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு, வெறும் நிலப்பிரச்சினை வழக்கு மட்டும் அல்ல. சட்டத்தின் மாட்சிமையை பரிசோதிக்கும் வழக்கு. இந்த வழக்கில், மத நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு அமைய வேண்டும் என்று நீதியை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறான். சுப்ரீம் கோர்ட்டும், இது நிலப்பிரச்சினை வழக்கு மட்டுமே என்று கூறியுள்ளது.

எந்த கோவிலையோ, எந்த வழிபாட்டு தலத்தையோ இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை என்ற வரலாற்று உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான், சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் தரப்பு வாதிட்டது. எனவே, ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு அமைவதையே எல்லோரும் விரும்புகிறோம். இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று ஏற்கனவே கூறி இருக்கிறோம். அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அதுபோல், முஸ்லிம்களும், சக குடிமக்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

தீர்ப்பு எப்படி இருந்தாலும், அமைதியை கடைப்பிடிக்குமாறு அனைத்து குடிமக்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story