ஆந்திராவில் மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகம்


ஆந்திராவில் மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 7 Nov 2019 1:56 AM GMT (Updated: 7 Nov 2019 1:56 AM GMT)

ஆந்திராவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருவதையடுத்து மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் மணல் தட்டுப்பாடு நிலவி வருவதால் ரியல் எஸ்டேட் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து மணல் தட்டுப்பாட்டை சரி செய்ய புதிய சட்டம் அமல்படுத்தப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மணல் சுரங்கங்களை ஒழுங்குபடுத்தவும், மணல் கொள்ளையை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.

இது தொடர்பாக உடனடியாக ஒரு அவசர சட்டம் இயற்றப்படும் எனவும் சட்டசபை அமர்வின் போது அது சட்டமாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அவசர சட்டத்தின் மூலமாக மணல் அள்ளுவதற்கான நிலத்தை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் மணல் கொள்ளை குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்படும் என்றும் மணல் சுரங்கங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் மூலம் மணல் விற்பனை அதிகரிக்கும் என அவர் கூறினார்.  

மேலும் மணல் தட்டுப்பாட்டை சரி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகவும், எதிர்கட்சிகள் இதனை அரசியலாக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story