ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்


ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது: சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 7 Nov 2019 7:19 PM IST (Updated: 7 Nov 2019 7:19 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது என்று சிவசேனா விமர்சித்துள்ளது.

மும்பை,
 
மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை  தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

மும்பையில் இன்று காலை மராட்டிய கவர்னர்  கோசியாரியை சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும், உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு காத்திருக்கும் வகையில் இந்த சந்திப்பை பிற்பகல்  பாஜக தலைவர்கள் ஒத்திவைத்திருந்தனர். ஆனால் சிவசேனா தரப்பிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை. சிவசேனா ஆட்சியில் சமபங்கு என்ற தனது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா எம்.எல்.ஏக்கள் இரண்டு நாட்கள் சொகுசு விடுதியில் தங்குமாறு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  ஆட்சி அமைக்க தங்களால் முடியாது என்பதை பாஜக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன்பிறகு, சிவசேனா அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும்.  

முதல் மந்திரி எங்கள் கட்சியில் இருந்து மட்டுமே  வர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை அவையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இன்று கவர்னரை சந்தித்த பாஜக  தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. வெறும் கையோடு ஏன் அவர்கள் திரும்பினர். ஜனாதிபதி ஆட்சி ஏற்படும் சூழலை பாஜக உருவாக்குகிறது. பாஜகவிடம் போதிய எண்ணிக்கை இல்லை” என்றார். 

Next Story