15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கர்நாடகத்தில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்


15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: கர்நாடகத்தில் இன்று மனுத்தாக்கல் தொடக்கம்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 8:53 PM GMT)

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து அந்த ஆட்சி கவிழ்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அப்போதைய சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அந்த 17 எம்.எல்.ஏ.க்களும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்நாடகத்தில் 17 தொகுதிகள் காலியாக இருப்பதாகவும், அதில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 தொகுதிகளில் தேர்தல் வழக்கு கோர்ட்டில் நடைபெறுவதால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

15 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலியாக உள்ள 15 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (இன்று) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாள். டிசம்பர் 5-ந் தேதி ஓட்டுப்பதிவும், டிசம்பர் 9-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இதற்கு முன்பு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்ததால், அப்போது வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் வருகிற 13-ந் தேதி தீர்ப்பு கூறப்பட உள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே, இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியும்.


Next Story