மூன்றாம் பாலினத்தவர் அறுவை சிகிச்சை சான்றிதழ் இணைப்புக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மூன்றாம் பாலினத்தவர் அறுவை சிகிச்சை சான்றிதழ் இணைப்புக்கு எதிராக வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Nov 2019 10:05 PM GMT (Updated: 13 Nov 2019 10:05 PM GMT)

மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என்ற விதிக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

1980-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த சான்றிதழை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ஒருவர் தனது பாலின அடையாளத்தை கூறுவதற்கு அரசியலமைப்பில் உரிமை தரப்பட்டுள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சை சான்றிதழை இணைக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் விதிகளில் கூறப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இந்த விதியால் மூன்றாம் பாலினத்தவர்கள் பலர் பாஸ்போர்ட் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாலின அடையாளத்தை பதிவு செய்ய உடல்ரீதியாக சோதனை தேவையில்லை. பாலின வேறுபாட்டை வைத்து குடிமக்களிடையே வேறுபாட்டை உருவாக்க கூடாது.

2007-ம் ஆண்டில் சங்கரி என்பவர் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக வாழ்ந்து வருகிறார். அவரது ஆதார் அட்டையில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மூன்றாம் பாலினத்தவர் நலவாரியமும் அங்கீகரித்துள்ளது. ஆனால், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த சான்றிதழை சமர்ப்பிக்காததால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இதுபோன்ற விதி இல்லை.

எனவே, அரசியலமைப்புக்கு முரணாகவும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும் உள்ள இந்த பாஸ்போர்ட் விதியை சட்டவிரோதமானதாக அறிவித்து அதை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்து, வருகிற டிசம்பர் 10-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டனர்.


Next Story