டெல்லி தீ விபத்து; உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: பா.ஜ.க. அறிவிப்பு

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அதிகாலை வேளையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் இறந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. பின்னர் இந்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளது. மீட்கப்பட்ட பலர் புகையால் பாதிப்படைந்து உள்ளனர் என தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் கார்க் தெரிவித்து உள்ளார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த வடகிழக்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி.யான மனோஜ் திவாரி உடனே தீ விபத்து நடந்த பகுதிக்கு சென்றார். அவர் கூறும்பொழுது, வருத்தத்திற்குரிய விசயம். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீட்டு தொகை கட்சி சார்பில் வழங்கப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story