உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தி.மு.க. மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை


உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தி.மு.க. மீண்டும் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2019 5:45 AM IST (Updated: 10 Dec 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி, உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந்தேதி அறிவித்தது.

ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இதனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுடன் உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பான மற்ற மனுக்களையும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்த தடை இல்லை என்றும், இதுகுறித்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என்றும், 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் நீங்கலாக, மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த மாநில தேர்தல் ஆணையம், அதற்கான புதிய தேர்தல் அட்டவணையை கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 6-ந்தேதி பிறப்பித்த உத்தரவை மாநில தேர்தல் ஆணையம் மீறி விட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை, மறுசுழற்சி இடஒதுக்கீடு முறையாக செய்யப்படவில்லை. கடந்த 1991-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் இடஒதுக்கீடு தொடர்பான மறுசுழற்சி முறையை தயார் செய்து அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை கடுமையாக பாதிக்கும். எனவே, தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தி 2019-ம் ஆண்டு வரையிலான இடஒதுக்கீடு தொடர்பான மறுசுழற்சி முறையை அமல்படுத்தி புதிதாக அறிவிப்பாணை வெளியிடவேண்டும். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாததால், கடந்த 7-ந்தேதி வெளியிட்ட தேர்தல் அறிவிப்பாணையை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டனர்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தி.மு.க.வின் மனுவையும், மற்ற மனுக்களையும் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Next Story