குடியுரிமை மசோதா: சிவசேனா ஆதரவு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்


குடியுரிமை மசோதா: சிவசேனா ஆதரவு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்
x

குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரிக்கும் எவரும் நமது தேசத்தின் அஸ்திவாரத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர் என ராகுல்காந்தி சிவசேனாவை விமர்சனம் செய்து உள்ளார்.

புதுடெல்லி

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நேற்று பாராளுமன்ற  மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளானது.  

மக்களவையில் நடைபெற்ற 9 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு,  311 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.  இந்த மசோதாவுக்கு  மராட்டியத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும்  சிவசேனாவும் ஆதரவு அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில்  தனது கட்சியின் புதிய கூட்டாளியான சிவசேனா மக்களவையில் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசுக்கு  ஆதரவளித்ததை அடுத்து ராகுல்காந்தி இந்த  மசோதாவுக்கு ஆதரவு அளித்தவர்கள் குறித்து விமர்சனம் செய்து உள்ளார்.

குடியுரிமை மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல். அதை ஆதரிக்கும் எவரும் நமது தேசத்தின் அஸ்திவாரத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர் என கூறி உள்ளார்.

Next Story